Thursday, September 30, 2010

ஷு டப்பாவும் பந்தும்

தீஷுவுடனான என்னுடைய விளையாட்டுகளைப் பதிய ஆரம்பித்த பொழுது அவளுக்கு வயது இரண்டு. அவளுக்கு ஒன்பது மாதமான நிலையில், அவள் நன்றாக உடகார ஆரம்பித்தவுடன் அவளுடன் நான் இது மாதிரி விளையாடத் தொடங்கினேன். ஆனால் ஏனோ அவற்றை எழுத தோன்றவில்லை. எப்பொழுதும் என் பதிவு தீஷு என்ன செய்தாள், எப்படி செய்தாள், அவளுக்குப்பிடித்ததா என்பதைச் சுற்றியே இருக்கும். அதை விட்டு நான் என் சொந்த விசயங்கள், பொதுவான அம்சங்கள் பகிர்ந்தது மிகவும் குறைவு. இப்பொழுது சில செயல்முறைகள் தீஷு முன்பு செய்தது அல்லது அவளுடன் நான் செய்ய வேண்டும் என்று நினைத்து செய்யாதது அல்லது சில நாடகள் கழித்து தீஷுவுடன் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறதையும் பதியலாம் என்று நினைத்திருக்கிறேன்.

என்னைப் பொருத்த வரை கற்றல் என்பது A,B,C & 1,2,3 மட்டும் அல்ல. கற்றல் என்பது ஏதாவது கற்க வேண்டுமென்று எப்பொழுதும் ஆர்வத்தோடு இருக்கும் குழந்தைக்கு, அதன் ஆர்வத்திற்கு ஏற்பக் கற்றுக் கொடுத்து, அதன் ஆர்வத்தைத் தக்க வைத்தல். நான் எப்பொழுதும் என் குழந்தையிடம் அது மாதிரி நடந்து கொள்கிறேனா என்றால் இல்லை என்பேன். ஆனால் அவளுக்குப் பிடிக்காததை அவளிடம் திணித்தால் அதன் நெகடிவ் எபெக்ட் தெரிந்ததால், ஆர்மில்லாததைத் திணிப்பதை முடிந்தவரை குறைத்திருக்கிறேன்.

குழந்தைகளின் கற்கும் முறை பெரியவர்களின் கற்கும் முறையை விட மிகவும் வித்தியாசமானது. குழந்தை தன் இடத்திலிருந்து சுற்றி இருப்பவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேயிருக்கிறது. நான் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன் - எவ்வாறு குழந்தை பேசக் கற்றுக் கொடுக்காமலே பிறர் பேசுவதிலிருந்தே கற்றுக் கொள்கிறதோ அதே போல் நாம் சொல்லிக் கொடுக்காமலே தன்னிடம் வாசித்துக் காட்டப்படும் வார்த்தைகளை வைத்தே வாசிக்கக் கற்றுக் கொள்ளும் தன்மை உடையது. குழந்தைகளின் உலகம் அழகானது. அது வெறும் A,B,C யில் கழிய வேண்டாமே.

இந்த பயிற்சி உட்கார பழகிய குழந்தையுடன் செய்யலாம். ஒரு ஷு டப்பாவில் ஒரு வழியை சொல்லோ டேப் போட்டு ஒட்டி விடவும். மேல் பகுதியில் ஒரு பந்து அளவு ஒட்டை போடவும். குழந்தையை அழைத்து பந்துடன் சில நேரம் விளையாடவிடவும். cause & effort பழகிக் கொள்ளட்டும். முடித்தவுடன் பந்தை ஒட்டை வழியில் உள்ளே போடவும். In என்று சொல்லவும். மீண்டும் வெளியே எடுத்து out என்று சொல்லவும். குழந்தை செய்ய தொடங்கியவுடன் இன், அவுட் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டுயிருக்க வேண்டும். ஒன்றரை வயதிற்கு மேற்பட்ட குழந்தை என்றால் இரண்டு பந்துகள் வெவ்வேறு நிறத்தில் எடுத்துக் கொண்டு கலர் சொல்லி, ரெட் பால் இன், ப்ளூ பால் அவுட் என்று கலர் சொல்லிக் கொடுக்கலாம். இந்த பயிற்சி கை கண் ஒருங்கிணைப்புக்கு மிகவும் ஏற்றது. கவன ஒருங்கிணைப்புக்கும் ஏற்றது. கலர் சொல்லிக் கொடுக்க, ஷேப் சொல்லிக் கொடுக்க பயன்படுத்தலாம்.

இந்த வயது குழந்தைக்கு வெகு நேரம் ஒரு இடத்தில் இருக்க முடியாது. அதனால் அவர்கள் செய்யும் நேரம் இரண்டு நிமிடங்கள் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்களின் செய்யும் நேரம் அதிகரிக்கும். இதை நான் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு குழந்தையும் சற்று வித்தியாசமானது. சில குழந்தைகள் செய்யும். சில குழந்தைகள் செய்யாது. அவர்கள் ஆர்வத்திற்கு விட்டுவிடுவோம்.

Wednesday, September 29, 2010

வாழ்த்து அட்டை

தீஷுவின் வ‌குப்பில் இர‌ண்டு ஆசிரியைக‌ள் ம‌ற்றும் ஒரு உத‌வியாள‌ர். ஆசிரியர் தின‌த்திற்கு அவ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் வாழ்த்து அட்டைக‌ள் கொடுத்தோம். எப்பொழுதும் போல் தீஷு செய்த‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்ப‌து என் விருப்ப‌ம். சார்ட் பேப்பரை வெட்டி கொடுத்தேன். முன்பு நான் பெயிண்டிங் கிளாஸ் சென்ற‌ பொழுது சொல்லிக் கொடுத்த‌து இந்த‌ வ‌ரைமுறை.



ஒரு த‌டிம‌ன் நூலை விர‌லில் சுற்றிக் கொள்ள‌ வேண்டும்.

சுற்றிய‌ நூலில் வ‌ரி வ‌ரியாக‌ ஒவ்வொரு க‌ல‌ராக‌ பெயிண்டை த‌ட‌வ‌ வேண்டும்.


நூலை எடுத்து, சார்ட் பேப்ப‌ரில் வைத்து, ஒரு நுனி ந‌ம் பக்க‌த்தில் இருக்கும் ப‌டி பார்த்துக் கொள்ள‌‌ வேண்டும். மேல் ம‌ற்றுமொரு காகித‌ம் வைத்து, நுனியை இழுத்தால், நூலிலுள்ள‌ பெயிண்ட் காகித‌த்தில் வ‌ரைந்து அழ‌கிய‌ டிசைன் உருவாக்கும்.



தீஷு ஒரு வாழ்த்து அட்டை ம‌ட்டும் இது போல் செய்தாள். அவ‌ளுக்கு படி படியாக எவ்வாறு செய்ய‌ வேண்டும் என்று procedure பின் ப‌ற்றுவ‌து பிடிப்ப‌தில்லை. அவ‌ளாக‌வே செய்ய‌ வேண்டும். ம‌ற்ற‌ இரு அட்டைக‌ளும் அவ‌ள் விருப்ப‌த்திற்கு செய்தாள்.

Tuesday, September 28, 2010

Tie dying

மருந்து கொடுக்க பயன்படும் dropper மூலம் தண்ணீர் ஒரு கிண்ணதிலிருந்து மற்றொரு கிண்ணத்திற்கு மாற்றும் பயிற்சி முன்பே செய்திருக்கிறோம். இப்பொழுது சற்று வித்தியாசப்படுத்தி எங்களிடமிருந்த மீன் பொம்மையின் குழி பகுதியில் தண்ணீரை விட வேண்டும். டிராப்பர் மூலம் தண்ணீர் மற்றும் பொழுது எழுத பயன்படும் விரல்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. மேலும் அகலமில்லாத பகுதியில் தண்ணீர் மாற்றும் வேலை கை கண் ஒருங்கிணைப்புக்கும் ஏற்றது.



தீஷு விருப்பமாக செய்தாள். அவளின் ஆர்வத்தைத் தக்க வைக்க சிறிது கலர் கலந்து சிகப்பு கலர் மற்றும் பச்சை கலர் தண்ணீர் கொடுத்தேன். அவள் மீனை நிறைத்தவுடன், அதன் மேல் டிஸ்யூ பேப்பர் போட்டு கலர் தண்ணீரை எடுத்தோம். டைய் (dye effect) போல் அழகாக வந்திருந்தது. பச்சையிலிருத்து பிரிந்திருந்த நீலம் என பார்க்க அழகாக இருந்தது.



ஒரு மாண்டிசோரி பயிற்சியை பெயிண்டிங் ஆக மாற்றியதில் எனக்கு சந்தோஷம்.

Thursday, September 23, 2010

கலர் கோலப்பொடி



நான் பொம்மைக்கடைக்குச் செல்ல நேர்ந்தால், ஏதாவது விளையாட்டின் ஐடியாவை தீஷுவின் வயதிற்கு ஏற்ப மாற்றி வீட்டிலேயே செய்ய முடியுமா என்று பார்ப்பது என் வழக்கம். வண்ண மணல்களை கண்ணாடி பாட்டிலில் போடும் ஒரு செயல்முறை விளையாட்டைப் பார்த்தவுடன் இதை வீட்டில் செய்யலாம் என்று நினைத்து ஐந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. தீஷுவிற்கு மணல் அலர்ஜி என்று தெரிந்தவுடன், உப்பு அல்லது கோலப்பொடி கொண்டு செய்யலாம் என்று நினைத்திருந்தேன். கலர் கோலப்பொடி வீட்டில் இருந்தது.அதைக் கொண்டு செய்தோம்.

ஒரு காலி பாட்டில் எடுத்து, அவற்றில் ஒவ்வொரு கலராக கலர் கோலப்பொடி போட வேண்டும். தீஷு விருப்பமாக செய்தாள். அடுத்த முறை செய்தால் கண்ணாடி பாட்டிலில் தான் செய்ய வேண்டும். இன்னும் கலர் நன்றாக வெளியே தெரியும். பாட்டில் ஏதாவது வித்தியாசமான வடிவத்திலிருந்தால் அழகாக இருக்கும்.

Tuesday, September 21, 2010

25 ஸ்டார்ஸ்

தீஷுவின் ப‌ள்ளி ஒன்ப‌து ம‌ணிக்குத் தான். ம‌ற்ற‌ ப‌ள்ளிக‌ளை ஒப்பிடும் பொழுது அது எங்க‌ளுக்கு வ‌ச‌தியான‌ நேர‌ம். ஆனால் தீஷுவை ரெடி செய்து நாங்க‌ள் வீட்டை விட்டு கிள‌ம்பும் பொழுது ஒன்ப‌து ப‌த்தாகி விடும். தீஷு ப‌ள்ளியை அடையும் பொழுது ஒன்ப‌து ப‌தினைந்து. அப்பொழுது தான் எல்லா குழ‌ந்தைக‌ளும் வ‌ரும் என்றாலும் நேர‌ம் த‌வ‌றுவ‌து என‌க்குப் பிடிக்காத‌ ஒன்று. தின‌மும் காலை வேளையில் அவ‌ள் வேலைக‌ளைச் செய்ய‌ சொல்லி அவ‌ள் பின்னால் ஓடிக் கொண்டே இருக்க‌ வேண்டும். அவ‌ள் வேலைக‌ளை நாங்க‌ளே சொல்லாம‌ல் அவ‌ளே செய்ய‌ ப‌ழ‌க்க‌ வேண்டும் என்ப‌து எங்க‌ள் விருப்ப‌ம்.

அத‌ற்கு நான் ப‌ய‌ன்ப‌டுத்திய‌து தான் இந்த‌ ரிவார்ட் ஸிஸ்ட‌ம். டாய்ல‌ட் உப‌யோக‌ப்ப‌டுத்துவ‌து, ப‌ல் துல‌க்குவ‌து, ப‌டிப்ப‌து, குளிப்ப‌து, சாமி கும்பிடுவ‌து, சாப்ப‌டுவ‌து, ஜ‌ர்கின் போட்டு ரெடியாவ‌து ‍‍ இது தான் தீஷு காலை வேளையில் வ‌ரிசையாக‌ செய்ய‌ வேண்டிய‌ செய‌ல்க‌ள். அச்செய‌ல்க‌ளின் ப‌ட‌ங்க‌ளை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டேன். க‌த்த‌ரித்து ஒரு சாட் பேப்ப‌ரில் வ‌ரிசையாக‌ ஒட்ட‌ வைத்தேன். தின‌மும் காலையில் நாங்க‌ள் சொல்லாம‌லே அவ‌ளாக‌வே செய்ய‌ வேண்டும். அப்ப‌டி செய்தால் அவ‌ளுக்கு ஒரு ஸ்டார். இவ்வாறு 25 ஸ்டார்ஸ் வாங்கிய‌வுட‌ன், அவ‌ள் கேட்ட‌ இட‌த்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்று சொல்லி இருக்கிறேன்.

க‌ட‌ந்த‌ இர‌ண்டு நாட்க‌ளாக செய்கிறோம். தீஷுவும் ச‌ந்தோஷ‌மாக‌ செய்கிறாள். இதில் என‌க்குப் பூர‌ண‌ விருப்ப‌மில்லை. ல‌ஞ்ச‌ம் கொடுப்ப‌து போல் முத‌லில் தோன்றிய‌து. ஆனால் ப‌ழ‌க்க‌ வேண்டும். ஒரு முறை ப‌ழ‌க்க‌ம் வ‌ந்துவிட்டால் அவளை செய்ய‌த் தொட‌ங்கிவிடுவாள் என்று ந‌ம்புகிறேன். பார்க்க‌லாம் எப்ப‌டி போகிற‌து என்று.

Monday, September 20, 2010



பல ஆக்டிவிட்டீஸுக்குத் தயார் செய்ய எடுத்த நேரத்தை விட தீஷு உபயோகப்படுத்தும் நேரம் கம்மியாக இருக்கும். ஏதாவது பண்ணலாம் என்று அவள் கேட்டவுடன் தோன்றியதைக் கொடுத்தால் தீஷு விருப்பமாக மீண்டும் மீண்டும் விளையாடுவாள். அப்படி ஒன்று தான் இந்த ஆக்டிவிட்டி.

இரு தாள்கள் எடுத்துக் கொண்டேன். ஒரு தாளின் இடையில் ஒரு கோடு வரைந்து, அந்த தாளை இரண்டாகப் பிரித்துக் கொண்டேன். இன்னொரு தாளில் ஒரு முக்கோணம் வரைந்து கொண்டேன். Cuisenaire ராடும் எடுத்துக் கொண்டேன்.

Keep number 5 above the line, keep number 3 inside the triangle, keep number 7 on the corner of the triangle என்று நான் சொல்ல சொல்ல தீஷு வைத்துக் கொண்டே வர வேண்டும். இதன் மூலம் above, below, inside, outside, corner, side போன்ற வார்த்தைகள் கற்றுக் கொண்டாள். சிறு குழந்தைகளுக்கு வண்ணம், வடிவம் கற்றுக் கொடுக்கக் கூட இந்த முறையில் முயற்சிக்கலாம்.

ப‌டித்து முடிக்க‌ முடியாம‌ல் புத்த‌க‌ம் இருக்கா?

சுட்டிப்பெண் ப‌டிக்க‌ விடாம‌ல் தொந்த‌ர‌வு செய்கிறாளா? அவ‌ளை பிஸி ஆக்க‌ தேவையான‌ பொருட்க‌ள்

1. கோல‌ப்பொடி
2. இரு கோப்பைக‌ள்
3. ஒரு ஃப‌ன‌ல் (Funnel)

மிக‌வும் எளிதான‌ ஆக்டிவிட்டி. கோல‌ப்பொடியை ஒரு கோப்பையிலிருந்து ம‌ற்றொரு கோப்பைக்கு ஃப‌ன‌ல் மூல‌ம் மாற்ற‌ வேண்டும்.

நால‌ரை வ‌ய‌து பெண் ச‌லிக்காம‌ல் அதை எவ்வ‌ள‌வு நேர‌ம் செய்வாள்? ஒன்ற‌ரை ம‌ணி நேர‌ம். தீஷு ஒரு ஆக்டிவிட்டி ஒன்ற‌ரை ம‌ணி நேர‌ம் செய்வ‌து இது தான் முத‌ல் த‌ட‌வை.

அம்மா -‍ ஜாலியாக புத்த‌க‌ம் ப‌டித்துக் கொண்டே இருக்க‌லாம்.

Tuesday, September 7, 2010

கவர்ந்த தருணங்கள் 8/9/2010

1. சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். தீஷுவிற்கு தண்ணீர் குடிக்கும் பொழுது புரை ஏறி விட்டது. அவள் போட்டிருந்த துணி நனைந்து விட்டது. அவளை தள்ளி உட்கார வைத்து, துணியை மாற்றி விட்டேன். அதற்கு தீஷு என்னிடம், "அம்மா, இப்ப ஏன் என்னைக் காப்பாத்தின?"

2. தீஷு பள்ளி ஜூனில் தொடங்கிய பொழுது புதிதாகச் சேர்ந்திருந்த குழந்தைகள் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து தீஷு என்னிடம் அவர்களைப் பற்றி கேட்டாள். அவுங்க எல்லாம் சின்ன பாப்பா. கொஞ்சம் பிக் (Big) ஆனவுடன் அவுங்க அம்மா தினமும் வந்து கூட்டிட்டு போயிருவாங்கனு அவுங்களுக்குப் புரிஞ்சவுடன் அழுகையை நிறுத்திடுவாங்க என்று சொல்லி வைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன் தீஷு வந்து என்னிடம் சொன்னாள்..

"முந்தி அழுத ஒரு பொண்ணு இப்ப அழுகையை நிறுத்திட்டா.. ஆனா நீ சொன்ன மாதிரி அவள் பிக்கா ஆன மாதிரி தெரியல.. அதே மாதிரி தான் இருக்கா.. நீ ஏன் அப்படி சொன்ன?"

இன்னைக்குச் சொன்ன பதில் என்னைக்குக் கேள்வியாகத் திரும்ப வருமோ என்று பயமா இருக்கு


3. என் தோழி UK விலிருந்து ஒரு சாக்லேட் பாக்ஸ் வாங்கி வந்திருந்தார்கள். என்னிடம் தீஷு அதிகாலையில் சாக்லேட் கேட்டாள். காலையில் சாப்பிடக்கூடாது என்றேன். சில நாட்கள் கேட்கவும் தொடவும் ஆள் இல்லாமல் பாக்ஸ் கிடந்தது. சில நாட்கள் கழித்து இரவு நேரத்தில் கேட்டாள். இராத்திரியில் சாப்பிடக்கூடாது என்றேன். உடனே தீஷு

"காலைல கேட்டா காலைல சாப்பிடக்கூடாதுனு சொல்லுற.. நைட்டு கேட்டா நைட்டு
சாப்பிடக்கூடாது சொல்லுற.. அப்ப எப்பத்தான் நான் சாப்பிடுறது"

4.என் தோழி பெண்ட் ஹவுஸில்(pent house) இருக்கிறார்கள்.ஒரு நாள் பார்பிக்யு (barbeque)பார்ட்டிக்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் வீட்டிற்கு வீட்டிற்கு வெளியில் பார்பிக்யு அடுப்பு வைத்து சமைத்துக் கொடுத்தார்கள். நான்கு ஐந்து மாதங்கள் ஆன நிலையில் தீஷு கேட்டாள், "ஏன்மா, அவங்க வீடு ரொம்ப சின்னதா? சமைக்க இடமில்லாமல் பத்திரத்தை வெளியே வைத்து சமைக்கிறாங்க."

5. தீஷுவும் நானும் கடிதம் எழுதி விளையாண்டு கொண்டிருந்தோம். நான் தீஷுவிற்கு, அவளுக்கு வாசிக்க எளிதாக "This is your letter" என்று எழுதிக் கொடுத்தேன். அவளும் அதே மாதிரி அதைப்பார்த்து எழுதிக் கொடுத்தாள். திரும்ப நான் " I love you" என்று எழுதினேன். பதிலுக்கு இந்த முறை நான் எழுதியதைப் பார்க்காமல், அவள் "I low mome" (I love mommy) என்று எழுதியிருந்தாள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost