தீஷுவிற்கு, வரும் எட்டாம் தேதி, எட்டாவது பிறந்த நாள். இது அவளுக்குத் தங்கப் பிறந்தநாள். வயதும் பிறந்த தேதியும் ஒன்றாக இருக்கும் பிறந்தநாள், தங்கப் பிறந்தநாள்.
அவளின் எட்டாவது பிறந்தநாளில் அவளைப் பற்றிய விஷயங்கள் :
1. கடவுளிடம், உனக்குத் தங்கை வேண்டும் என்று கேட்டாயா அல்லது தம்பி வேண்டும் என்று கேட்டாயா என்று கேட்ட தோழியிடம், எனக்குத் தங்கை வேண்டும் என்று கேட்டேன் என்று பதில் கூறினாள் தீஷு. எனக்குத் தம்பி வேண்டும் என்று வேண்டினேன் என்றாள் தோழி. ஏன் என்று தீஷு கேட்டதற்கு, அப்பொழுது தான் தம்பிக்கென்று தனி பொம்மைகள் இருக்கும். அவன் தனியாக அதில் விளையாடுவான், நான் தனியாக என் பொம்மைகளுடன் விளையாடுவேன் என்றாள். அதற்கு தீஷு, , "I didn't want to play alone with toys. I wanted to play together with my sister even without any toys" என்றாள். இது தான் என் அன்பு தேவதை தீஷு.
2. தீஷுவிற்கு ஒரு வேலையை பல தடவை ஞாபகப்படுத்த வேண்டும். இரண்டு வேலையை ஒரே நேரத்தில் சொன்னால், ஒன்றை முடித்து விட்டு, அடுத்ததை மறந்து விடுகிறாள். அவளுக்கு ஞாபகப்படுத்துவதற்கு நானும் என் கணவரும் எத்தனையோ வழிமுறைகளை முயற்சித்து விட்டோம். எதுவும் அவளிடம் பலிக்கவில்லை. அவளாகவே திருந்தவேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக ஞாபகப்படுத்துவதை விட்டுவிட்டோம். அவள் முழுதாக மறந்து, கடைசி நிமிஷத்தில் நான் ஞாபகப்படுத்தி, அவளுடன் நானும் சேர்ந்து போராடி வேலைகளை முடிக்க வேண்டி உள்ளது. கடைசி நிமிட ஞாபகப்படுத்தலை நிறுத்து, இரண்டு முறை ஆசிரியரிடம் தண்டனை வாங்கினாள் என்றால் அடுத்த முறை அவளாகச் செய்வாள் என்று என் கணவர் கூறுகிறார். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. அடுத்த பிறந்தநாளுக்கு முன் தன் ஞாபக மறதியை குறைத்துக் கொள்ளுவாள் என்று நினைக்கிறேன்.
3. "அம்மா, பாப்பா அழுகிறா பாருங்க"
"அம்மா, சம்முக்கு மருந்து போடுவதற்கு முன்னால, நான் கேக்கிறேன். நீங்கள் போட மாட்டேன், சம்முவுக்கு மட்டும் தானு சொல்லுங்க. அவளுக்கு மட்டும் தான் ஸ்பெஷலா போட்டு விடுறீங்கனு நினைச்சு, அழாம போட்டுக்குவா"
"அம்மா, நீங்க வேலைக்குப் போனீங்கனா நான் ஸ்கூலுக்குப் போகாம, சம்முவோட டைகேர்ல போய் அவளைப் பார்த்துக்கிடுவேன். அங்க இருக்கிறவங்களுக்கு எதுக்கு அழுகிறானு எப்படித் தெரியும்?"
- இதெல்லாம் தீஷுவின் பொன்முத்துகள்.
எவ்வளவு அழகாத் தூக்குகிறாள், எவ்வளவு நல்லாப் பார்த்துக்கிறாள் என்று பிறரிடம் தன் தங்கைப் பாசத்திற்கு பல பாராட்டுப் பத்திரங்கள் வாங்கி இருக்கிறாள்.
4. புதிதாக கற்றுக் கொடுக்கும் விஷயத்தை கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கிறது. ஆனால், பழகிய புது விஷயத்தை, மீண்டும் மீண்டும் தானாக முயற்சித்து மேலும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற கனல் குறைவு. பழக்கம் இல்லாமல் பழகிய விஷயத்தை சில நாட்களில் மறந்து போய்விடுகிறாள். மீண்டும் முதலிருந்து ஆரம்பிப்போம். பயிற்சி எவ்வளவு முக்கியம் என்று அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
5. மெக்ஸிக்கோவிலிருந்து வந்திருக்கும் ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாத குழந்தைக்கு, இரண்டு மாதங்கள் சைகை மொழியில் டீச்சர் சொல்லுவதை வகுப்பிலும், குழந்தைகள் சொல்லுவதை விளையாட்டு/சாப்பாடு நேரங்களிலும் விளக்கியிருக்கிறாள். நான் டீச்சர் கான்பெரன்ஸ் சென்று இருந்த பொழுது, டீச்சர் மிகவும் பாராட்டினார்கள். பல நேரங்களில் உதவும் குணத்தை அவளிடம் பார்த்து இருக்கிறோம். அவ்வாறு அவள் இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி!
6. எப்பொழுது பார்த்தாலும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாள். புத்தகம் என்றால் வெறும் கதை புத்தகம். வந்தவுடன், புத்தகத்தை எடுத்து விடுவதால், என்னிடம் பேசுவதற்குக் கூட நேரம் இருப்பதில்லை. ஹோம்வொர்க் போன்ற மற்ற விஷயங்களில் விருப்பம் இருப்பதில்லை. கதை புத்தகம் இல்லாத மற்ற புத்தகங்களில் சுத்தமாக ஆர்வம் இருப்பதில்லை. தப்பு என்று சொல்லவில்லை ஆனால் ஒரே மாதிரி புத்தகங்களை படிப்பது அவள் வளர்ச்சிக்கு சரியா என்று புரியவில்லை. மற்ற புத்தகங்களில் ஆர்வம் உண்டாக்குவதற்காக நூலகத்திலிருந்து சில புத்தகங்களை எடுத்து வந்து அவள் புத்தகங்கள் இருக்கும் இடத்தில் வைத்தல், நாங்கள் படித்தல் போன்று செய்தாலும், அவள் பக்கத்தில் நோ ரியாக்ஷன்!
7. விளையாடும் பொழுது, டைம் அவுட் சொல்லி பூச்சியை ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது, அவுட் செய்த குழந்தையிடம், கிட்டத்தட்ட சண்டைக்கு நின்றதால் அனைத்து குழந்தைகளும் விளையாட முடியாமல் போய் இருக்கிறது. நான் தவறு செய்யாத பொழுது எதற்காக அவள் சொல்லுவதை எல்லாம் ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிற வீம்பு. நீ செய்தது சரி என்றால் யார் சொன்னாலும் எதிர்த்து நில் என்று சொல்லவா அல்லது நண்பர்களுக்காக சில நேரங்களில் விட்டுக் கொடுத்தால் தப்பில்லை என்று சொல்லவா என்று புரியாமல் நாங்கள் தான் குழம்பிப் போகிறோம்.
இது தான் தீஷு. அன்பு, கோபம், பொறுமை, பொறாமை போன்று அனைத்துக் குணங்களும் கொண்ட ஒரு இளம் பெண்ணாக மாறி வருகிறாள். நல்ல குணங்களை வளர்த்து கெட்ட குணங்களை குறைந்து, ஒரு நல்ல பெண்ணாக அவள் வளர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்! அவள் ஒரு நல்ல மனிதாபிமான மிக்கப் பெண்ணாக வளர, அவள் பிறந்த நாளில், உங்கள் ஆசிகளை வழங்க வேண்டுகிறேன்!
Happy Birthday chellam!