அப்பாவின் பிறந்தநாளுக்கு என்ன பரிசளிக்கலாம் என்று தீஷு இரண்டு மாதங்களாக (ஆம்!) தலையை உடைத்துக் கொண்டிருந்தாள். கடந்த வாரயிறுதியில் அப்பாவுக்குப் பிறந்தநாள். வியாழன் வரை ஒன்றும் செய்திருக்கவில்லை (தலையை உடைத்ததைத் தவிர!). அப்பாவுக்குத் தெரியாமல் கடைக்குச் சென்று கேக் வாங்கி பிறந்தநாள் அன்று வெட்ட வேண்டும் என்று சொன்னாள். சரி என்றேன்.
அப்பாவுக்கு ஓவியங்கள் பிடிக்காது அதனால் அறிவியல் கணிதம் உபயோகித்து ஒரு வாழ்த்து சொல்லப் போகிறேன் என்று ஒரு சின்ன பெட்டியையும் காகித்தையும் வைத்து 2 மணி நேரம் ஏதோ செய்து கொண்டிருந்தாள். ஒரு நேரத்தில் பொறுமை இழந்து என்ன செய்யிற என்றேன். வாழ்த்து எழுதியிருந்த காகித்தைக் காத்தாடி போல் மடித்து, பெட்டியில் வைத்து மூடி, பெட்டியை திறந்தவுடன், மடித்திருந்த காகிதம் விரிந்து வெளியே வந்து வாழ்த்து சொல்வது போல் செய்து கொண்டிருக்கிறேன் என்றாள்.
ஒட்டப்பட்டிருந்த காகிதம் செங்குத்தாக நிற்க முடியாமல் பெட்டிக்குள் விழுந்ததால் அட்டைகளை ஒட்டி வைத்து ஒரு பூகம்பத்தை பெட்டிக்குள் நிகழ்த்தியிருந்தாள். அவளின் ஐடியா வேலை செய்யவில்லை என்று வருத்தத்தில் இருந்தாள்.
அவள் வருத்தத்தைப் போக்குவதற்காக ஒரு வாழ்த்து அட்டை செய் என்றவுடன், அப்பாவுக்குப் பெயிண்ட்டிங் பிடிக்காது என்றாள். உன் அப்பாவையே பெயிண்ட்டிங் செய்ய வைக்கலாம் வா ஒரு ரகசிய வாழ்த்து அட்டை செய்தோம்.
ஒரு வெள்ளைத்தாளில் வெள்ளை க்ரையானால்(Crayon) எழுதச் சொன்னேன். எனக்கு வேலை இருந்ததால் அவள் என்ன எழுதினாள் என்று கவனிக்கவில்லை. தாளும் க்ரையானும் வெள்ளையாக என்பதால் பார்த்தவுடன் எழுத்துகள் தெரியவில்லை.
பிறந்தநாள் அன்று பரிசளித்ததும், அவள் அப்பா சூரிய வெளிச்சத்தில் வைத்து படிக்கப் பார்த்தார். வாட்டர் கலர் வைத்து வண்ணம் தீட்டினால், நன்றாக எழுத்துகள் தெரியும் என்று அவள் அப்பாவை வண்ணம் தீட்டச் செய்தாள். பெயிண்ட்டிங் பிடிக்காத அப்பாவை பெயிண்ட்டிங் செய்ய வைத்தோம்.
நான் மணிக்கணக்கில் நேரம் செலவளித்து பெயிண்ட்டிங் செய்து காட்டினால், பார்க்காமலே நன்றாக இருப்பதாகச் சொல்லும் அவர், தன் பெண் சொன்னவுடன் வாட்டர் கலரால் வண்ணம் தீட்டத் தொடங்கிவிட்டார். வாட்டர் கலர் செய்தவுடன், க்ரையான் பெயிண்ட்டை தடுத்து வெளியே தெரிய ஆரம்பித்தது.
வாழ்த்தில் இருந்தது இது தான் :
Dear Appa,
Happy Birthday! I am very happy to be your daughter. Thank you for teaching HTML.
Love,
Dheekshitha.
குழந்தை ஸ்பெஷல் வாழ்த்து அட்டை, சர்பரைஸ் கேக் என்று பண்ணும் பொழுது நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அன்று மதியம் சமையல் சாதமும் ரசமும் (மட்டும்) செய்தேன். :)))