தீஷு தமிழ் படித்துக் கொண்டிருந்தாள். சோளம் என்றால் என்ன என்றாள். சோளக்கருது என்றேன். அப்படினா என்றாள். அப்பொழுது தான் புரிந்தது நாங்கள் சோளத்தை கார்ன் என்று சொல்லுகிறோம் என்று. சிறு வயதில் சோளக்கருது என்று சொன்னது கார்ன் என்று எவ்வாறு மாறியது என்று யோசிக்கத் தொடங்கினேன். பதில் கிடைக்கவில்லை.
அப்படி எத்தனை வார்த்தைகளை மாற்றி இருக்கிறோம் அல்லது மறந்து இருக்கிறோம் என்று நாங்கள் பேசும் பொழுது கவனிக்கத் தொடங்கினேன்.
என் கவனிப்பைச் சொல்லுவதற்கு முன் அதற்கு முதல் நாள் நடந்த ஒரு சின்ன உரையாடல். எங்கள் தோழியர் வட்டத்தில் தெலுங்கு பெண் ஒருவர் இருக்கிறார். அவரிடம் சக்கரைக்கு தெலுங்கில் என்ன என்று ஒரு தோழி கேட்டதற்கு பஞ்சதாரா என்று சொல்லுவிட்டு, இப்பொழுது யாரும் பஞ்சதாரா என்று சொல்லுவது கிடையாது.யார் அவ்வளவு பெரிய வார்த்தையை உபயோகப்படுத்துவார்கள் என்றார். நான் உடனே நகைச்சுவைக்காக நயன்தாராவை எப்படி சொல்லுவீர்கள் என்றவுடன், நயன்தாரா தான் என்றார்கள். அது மட்டும் பெரிய வார்த்தை இல்லையா என்று சிரித்தோம். மற்றொரு தோழி இப்படி அடுத்த தலைமுறைக்குக் கடத்தாத வார்த்தைகள் கொஞ்ச கொஞ்சமாக அழிந்து போகும் என்றார்கள்.
இப்பொழுது என் கவனிப்புக்கு வருவோம். நாங்கள் பேசுவதும், அடைப்புக்குறிக்குள் இருப்பது நான் சிறுவயதில் பேசியதும்.
1. ப்ரஷ் பண்ணு (பல் தேய்)
2. ஸிஸர் (கத்திரிக்கோல்)
3. ஸிலிப்பர்(செருப்பு)
4. ஸ்டவ் (அடுப்பு)
5. வெயிட் (காத்திரு)
6. டேஸ்ட் (ருசி)
7. ஸ்வீட் (இனிப்பா)
8. டைம் ஆகிடுச்சி (நேரம் ஆகிடுச்சி)
9. பனானா (வாழைப்பழம்)
10. டேட்ஸ்(பேரீச்சம் பழம்)
11. காஷூ (முந்திரி பருப்பு)
இது காலையில் பள்ளிக்குக் கிளம்பும் முன் ஒரு சில நிமிடங்கள் நடந்த உரையாடல்களில் நான் கவனித்தது. தோழி கூறியது போல் எத்தனை வார்த்தைகளைக் கடத்தத் தவறி இருக்கிறேன்.
வீட்டில் தமிழில் தான் பேசுவோம் என்று பெருமையாக நான் சொல்லுவது உண்டு. ஆனால் பேசுவது தமிழ் தானா என்கிற சந்தேகம் வரத் தொடங்கி உள்ளது.