Tuesday, January 28, 2014

குழந்தை ஓவியர்களின் படைப்புகள் புத்தகத்தில் இடம்பெற..

Quarry Books என்னும் international publisher தங்கள் "1000 Kids Art Ideas" புத்தகத்திற்காக குழந்தைகளின் படைப்புகளை (art projects) கேட்டு இருக்கிறார்கள். இ‍-மெயிலில் டிஜிட்டல் கோப்பாக இணைத்தால் போதும். அனுமதி இலவசம். ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டும் என்றாலும் அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் புத்தகத்தில் (e-book அல்ல‌) இடம்பெறும்.

அவர்கள் தளத்திலிருந்து


1000 Kids Art Ideas is announcing a call for entries: educators, parents, home schoolers, community groups, and caregivers, help us inspire others by submitting digital photos of hands-on art projects by children ages 3-11 (preschool through 5th grade).

We are interested in all types of art projects but especially ones that use every day materials in new ways, explore individual creative expression for people of all ages, and are fun! Have you created a sculpture using sponges? Painted with mailing tubes? We want to see your dynamic and exciting art and design!

Winners will be published in 1000 Kids Art Ideas which will feature 1000 unique and inspiring ways to be creative with the budding artists in our lives.


மேலும் விவரங்களும் அனுப்பவேண்டிய முகவரியும் இந்தப் படிவத்தில் உள்ளது. கடைசி நாள் 15-2-2014.

 

Monday, January 27, 2014

ஞாபகசக்தியை அதிகரிக்க..

ஞாபகசக்தியை அதிகரிக்க நாங்கள் மேற்கொள்ளும் வழிமுறையைப் பற்றியது அந்த இடுகை. தீஷுவிற்கு ஒவ்வொரு விஷயத்தையும் நினைவுப்படுத்த வேண்டும். ஒரு எக்சல் ஷீட்டில் ஒவ்வொரு கிழமைக்கும் அவளுக்கான வேலைகளை எழுதி, பிரிண்ட் அவுட் எடுத்து ஃப்ரிஜ் கதவில் ஒட்டி வைத்திருக்கிறேன். ஆனால் தினமும் அந்தப் பேப்பரைப் பார் என்று நினைவுப்படுத்த வேண்டும் :((. ஒரு வேலை முடித்து விட்டு இன்னொரு வேலை செய் என்று இரண்டு வேலைகள் ஒரே நேரத்தில் கொடுத்தால், முதல் வேலை முடித்தவுடன் இரண்டாவது வேலையை மறந்துவிடுகிறாள். இந்த வயதில் இது சகஜம் தான் என்று டாக்டர், டீச்சர் எல்லோரும் சொல்லிவிட  நிம்மதி அடைந்தேன். ஆனால் ஒரு நாள் பள்ளியிலிருந்து புத்தகப்பையை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டாள் :((. அவள் ஞாபகசக்தியை அதிகரிக்க சில வழிமுறைகளை மேற்கொள்ள ஆரம்பித்து இருக்கிறோம்.

1. மோனோபோலி (Monopoly) ‍நம் ஊரில் பிஸ்னஸ் போன்ற விளையாட்டுகள் விளையாடுதல் : தாம் வாங்கிய இடங்களில் பெயர்களை நினைவில் வைத்திருந்து வாடகை வாங்க வேண்டும். அவள் வாடகை கேட்கவில்லை என்றால் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிடுவேன். ஆனால் அனைத்து இடங்களில் பெயர்களையும் நினைவில் வைத்து இப்பொழுது இந்த விளையாட்டில் நல்ல முன்னேற்றம்(!).

2. இரண்டு வேலைகளை செய்யப் பழக்குதல் : என் கணவரும் தீஷுவும் விளையாடும் இந்த விளையாட்டு ‍ இரண்டு செயல்களை ஒரே நேரத்தில் செய்தல். உதாரணத்திற்கு எளிமையான கணிதக் கணக்குகளை கேட்டுக் கொண்டே அவள் முதுகில் தட்டிக் கொண்டேயிருப்பார். கணக்குகளுக்கு விடைகளை அளித்துக் கொண்டே வர வேண்டும் மேலும் இறுதியில் எத்தனை முறை தட்டினார் என்று சொல்ல வேண்டும்.

3. www.Lumosity.com : இது என் கணவரின் யோசனை. கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டாம் என்று முதலில் தோன்றியது. ஆனால் லுமோசிட்டி நரம்பு மண்டல நிபுணர்கள் (Neuro Scientists) வடிவமைத்தது என்று சொன்னவுடன் சற்று நம்பிக்கை பிறந்தது. சில தினங்களாக தினமும் ஒரு முறை விளையாடுகிறாள். நாங்கள் கம்ப்யூட்டரில் விளையாண்டது இல்லை. ஐபாட். கம்ப்யூட்டரிலும் அதே மாதிரி விளையாட்டுகள் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.  

4. தூக்கம், பிடித்தமான வேலைகளை இணைந்து செய்தல் : முன்பு அவளை எட்டரை மணிக்கு தூங்கச் சொல்லுவேன். நீயும் வந்து படு என்று நேரத்தைக் கடத்திக் கொண்டே இருப்பாள். அதனால் இப்பொழுது நானும் அவளுடன் சேர்ந்து தூங்கச் சென்று விடுகிறேன். அதே போல் அவள் வேலைகளில் எதிலெல்லாம் இணைந்து செய்ய முடியுமோ அவற்றை இணைந்து செய்கிறோம். அவ்வாறு செய்யும் பொழுது அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவள் இறுக்கம் தளரும் பொழுது அடுத்து செய்ய வேண்டியது நினைவுக்கு வந்துவிடுகிறது. 

 5. Brain Gym Exercises :  கீழே வீடியோவிலுள்ள பயிற்சிகளை இணைந்து காலையில் செய்கிறோம். சூரிய நமஸ்காரம் 10 முறை செய்கிறோம்.



6. மேலும் அதிக தண்ணீர், எண்ணெய், இனிப்பு, ஃபுட் கலரிங் குறைப்பு என்று சமையலிலும் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். சுடோகு, குறுக்கொழுத்து, விடுகதைகள் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுவது உண்டு. 

இவற்றால் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா என்று முழுமையாகத் தெரியவில்லை ஆனால் பள்ளியிலிருந்து பையை எடுத்து வந்துவிடுகிறாள் :)). உங்கள் குழந்தைகளின் ஞாபகசக்தியை அதிகரிக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Friday, January 17, 2014

வண்ணத்துப்பூச்சி

எந்த ஒரு அலங்காரத்திற்கு ஒரு கருப்பொருளை (theme) எடுத்துக் கொண்டால் அலங்காரத்தை எளிதாக செய்ய முடியும் என்பது என் எண்ணம். பலூன் போன்ற சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களையும் முடிந்தவரை  தடுத்துவிடுவேன். சம்மு பிறந்தநாளுக்கு நான் எடுத்த கருப்பொருள் வண்ணத்துப்பூச்சி.

வண்ணத்துப்பூச்சி படங்கள் பல இணையத்தில் கிடைத்தாலும் நாமே ஒன்று உருவாக்க வேண்டும் என்று பல மென்பொருட்களில் முயற்சித்து இறுதியில் வேர்ட்டில் (Word) வண்ணத்துப்பூச்சி போல் ஒன்றை உருவாக்கினேன். இந்த வருடம் ஏதாவது ஃக்ளிப் ஆர்ட்(clip art) செய்யும் மென்பொருள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நினைத்திருக்கிறேன். சுயமாக கற்றுக் கொள்ள எளிமையான மென்பொருள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே!

வண்ணத்துப்பூச்சி வரைந்து முடித்தவுடன், அதே படத்தை பல இடங்களில் உபயோகப்படுத்திக் கொண்டேன். விருந்திர்னர்களை வரவேற்க ஹால் வாசலில் "Welcome to Samanvitha's B'fly Party" என்ற வார்த்தைகளுடன், என்ன உணவு என்று தெரியப்படுத்தும் ஃபுட் டாகில் (Food Tag), "Thanks for celebrating with me" என்று ரிடர்ன் கிஃப்ட்டி என்று அனைத்து இடத்திலும் அதே வண்ணத்துப்பூச்சி. 

வண்ணத்துப்பூச்சி என்று சொல்ல மட்டும் செய்கிறேன். ஆனால் என்ன வரைந்தேன் என்று காட்டவில்லையே! நான் வரைந்த வண்ணத்துப்பூச்சி இந்த தொப்பியில் உள்ளது தான். தொப்பியும் நானே செய்தேன். ஆனால் அணிவிக்க மறந்துவிட்டேன்.  :((. அதே போல் செய்த மற்றவற்றை புகைப்படம் எடுக்க மறந்துவிட்டேன் :((



விழாவிற்கு வந்தவர்கள் கையொப்பமிட பட்டாம்பூச்சிகள் கொண்ட ஒரு கையொப்ப ஷீட் உருவாக்கினேன். அந்த ஐடியா இணைத்தில் எடுத்தது. வந்த சில நண்பர்கள் கையொப்பமிட்டு உள்ளார்கள்.


அலங்காரத்திற்கு "Happy Birthday Samanvitha" என்ற ஒரு பானர் செய்தேன். எழுத்துகள் பிரிண்ட் அவுட் எடுத்து, வெட்டி, அதை  பெயிண்ட ஸாம்பிளில் வைத்து வரைந்து வெட்டிக் கொண்டேன். இப்பொழுது வண்ண வண்ண எழுத்துகள் கிடைத்தன. வண்ணத்துப்பூச்சி வடிவங்களில் வண்ணப் பேப்பரை வெட்டி அதில் கலர் எழுத்துகளை ஒட்டிவிட்டேன். அவ்வாறு ஒட்டியவற்றை ஒரு ரிப்பனில் ஒட்டிவிட்டேன். பானர் ரெடி. எனக்குச் செய்ய அதிக‌ நேரம் எடுத்தது இது தான்.  


பானரைச்சுற்றி அலங்கரிப்பதற்கு காகித வண்ணத்துப்பூச்சிகள் செய்தேன். தூக்கிப்போட வைத்திருந்த ஒரு மாத இதழில் வண்ணமயமான படங்கள் இருந்தன. அந்தப் பக்கங்கள் கொண்டு செய்தேன். இவை  செய்யும் பொழுது படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன். பிறகு வேறு ஒரு இடுகையில் செயல்முறை பகிர்கிறேன். 


வண்ணத்துப்பூச்சி பறப்பது போல் ஹாலை அலங்கரிக்க நினைத்தேன். இரு வண்ணத்துப்பூச்சிகள் இணைத்து 3டி எபெக்ட உருவாக்கினேன். ஆனால் அந்த ஹாலில் அவ்வாறு அலங்கரித்தால் எங்கள் தலையில் இடித்தது. அதனால் வெறுமே தொங்க மட்டும் விட்டோம். கேக் வைத்திருந்த மேஜையிலும் அதே பட்டாம் பூச்சிகள் தாம். 



டிஸ்யூ பேப்பரில் செய்த பட்டாம் பூச்சிகளை ஓரங்களில் ஒட்டிவிட்டோம். 



ஒரு பிறந்தநாள் விழாவிற்கு எதற்கு இந்த மெனக்கிடல் என்று கேட்டவர்களும் உண்டு. புகழ்ந்தவர்களும் உண்டு. எனக்கு இது போல் அலங்கரிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது என்று நானே அறிந்து கொண்ட தருணம் அது. 

அடுத்து தீஷுவின் பிறந்த நாள் விழாவிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அவளுக்கு இந்த வருடம் தங்கப் பிறந்த நாள். பிறந்த தேதியும் வயதும் ஒன்றாக வந்தால் அது தங்கப் பிறந்த நாள். அதாவது எட்டாம் தேதி பிறந்தவர்களுக்கு எட்டு வயது பிறந்தநாள் தங்கப் பிறந்த நாள். வாழ்வில் ஒரு முறை தான் வரும். நிறைய தங்க நிற பெயிண்ட்டும் கிளிட்டரும்(glitter) உபயோகப்படுத்த வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன் :))   

Tuesday, January 14, 2014

பிறந்தநாள் ஸ்பெஷல்!

12-Jan-2014 அன்று இரண்டாவது பிறந்த நாள் கண்ட என் செல்லக்குட்டி சம்முவிற்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல!

ப்ளாக் எழுதத் தொடங்கிய சமயத்தில் தீஷுவின் புகைப்படத்தையும் அவளைப் பற்றிய சில சொந்த விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறேன். அவளது புகைப்படங்களை இணையத்தில் வேறு சில தளங்களில் பார்த்தவுடன், அவள் ப்ரைவசிக்காக இப்பொழுது அவள் முகத்தைப் போடுவதில்லை. ஆனால் சம்முவைப் பற்றி நான் அதிகம் எழுதியதில்லை. அதனால் இந்தப் பிறந்த நாள் ஸ்பெஷல் இடுகை!

சம்மு நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் எங்கள் வாழ்க்கையில் இணைந்தவள். தனக்கு தங்கை தான் வேண்டும் (தம்பி என்றால் அடிப்பான்) என்று கடவுளிடம் கேட்டதால் தான் தங்கை பிறந்திருக்கிறாள் என்று தீஷுவிடம் கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தியவள். மூன்று மாதங்களில் பால் குடிப்பதை நிறுத்தி, டாக்டரை குழப்பியவள். ஸ்பூனிலும் ஃபில்லரிலும் பால் கொடுக்க வைத்து எங்கள் முதுகை ஒடித்தவள். அவள் முதல் வருடத்தை நினைத்தால் இவை தான் நினைவுக்கு வருகின்றன. எங்களின் மூவர் உலகத்தை நான்காவதாக இணைந்து முற்றிலும் மாற்றியவள் சம்மு.

புதிய வளர்க்கும் அனுபவத்தைக் கொடுத்தவள். ஒவ்வொரு குழந்தையும் வேறு என்று புரிய வைத்தவள். தீஷுவிடமிருந்து அனைத்திலும் வித்தியாசம். அவள் சிரிப்பில் அனைவரும் மயங்குவது நிச்சியம். அக்கா செல்லம். தமிழில் சரளமாக பேசுகிறாள். ஆங்கிய வாக்கியங்கள் அக்காவின் உபயத்தால் வருகின்றன ("Just kidding", "Look at this Amma", "This is .."). அப்பா தன் உறவுகளிடம் வீட்டில் தெலுங்கு பேசுபவர். மதுரையில் வளர்ந்ததால் தமிழ் பேசவும் வாசிக்கவும் தெரியும் (இன்று இன்னொரு விஷயம் சபைக்கு வந்திருக்கிறது :)).அதனால் அப்பாவிடம் பேசி தமிழும் தெலுங்கும் ஒரே வார்த்தையில் வருகிறது. உதாரணத்திற்கு உட்கார்ந்திருக்கிறேன் என்பதற்கு கூச்சுக்கிறேன் என்றாள் :))  

ஒரு விநாடியில் எடுத்த புகைப்படத்தில் மட்டுமே பார்த்த சம்முவைப் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். :))

சம்முவின் குரலில் அச்சுதம் கேசவம் பாடல் Play Song

அவளை எங்கள் குழந்தையாக பெற்றதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். எல்லா வளங்களையும் பெற்று என் செல்லம் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
  
பி.கு :பிறந்த நாள் விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்தமுறை சம்முவின் பிறந்தநாள் விழாவின் தீம் : பட்டாம் பூச்சி. அனைத்து அலங்காரப் பொருட்களும் வீட்டிலேயே செய்தோம். அதைப் பற்றி அடுத்த இடுகையில் எழுதுகிறேன் :))







Friday, January 10, 2014

புத்தாண்டு மற்றும் பிறந்தநாள்!!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! 

டிசெம்பர் 31 இரவில் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் எனக்குப் பிடித்த உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அந்த ஆண்டு நல்லதொரு ஆண்டாக அமையும் என்று எனக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு. என் தோழிகளிடம் சொன்னவுடன் அனைவரும் வருவதாகச் சொன்னார்கள். வீடு பத்தாது என்பதால்  பார்ட்டி ஹாலில் செய்ய‌லாம் என்று தோன்றியது. விழாவிற்கு நான் பொறுப்பேற்றேன். ஹால் புக் செய்ததிலிருந்து வேலை ஆரம்பித்தது.

முதலில் அனைவரும் ஒரு உணவு சமைத்து எடுத்து வருவது என்று ஆரம்பித்து, அன்னைக்கும் சமைக்க வேண்டுமா என்று பிட்ஸா ஆர்டர் செய்து விட்டோம். யாரை எல்லாம் கூப்பிடுவது, எவ்வளவு பணம் வசூல் செய்வது, எதில் செலவு செய்வது என்று நான் எக்ஸல்லில் பிஸியாகி விட்டேன். குழந்தைகள் கலை நிகழ்ச்சி செய்யலாம் என்று ஒரு தோழி சில குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுத்தார். 

ஏழரை மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி பன்னிரெண்டு மணிக்கு கேக் வெட்டியதும் நிறைவுற்றது. முதலில் சாப்பாட்டு கடை. முடித்தவுடன் குழந்தைகள் நிகிழ்ச்சி. ஒரு மூன்று வயது சிறுவன் கிட்டாருடன் பாடியது அருமையாக இருந்தது. அடுத்து சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுகள். முடித்தவுடன் ஒரு மணி நேரத்திற்கு நடனம். சரியாக பன்னிரெண்டு மணிக்கு கேக் வெட்டினோம். மிகவும் நன்றாக நடந்தது பார்ட்டி.

என் இல்ல நிகழ்ச்சி இல்லாத ஒன்றுக்கு நான் பொறுப்பேற்பது இது தான் முதல் முறை. நல்லதொரு அனுபவமாக இருந்தது. நம் இல்ல நிகழ்ச்சிக்கு நாம் என்ன நினைக்கிறோமோ இதைச் செய்ய முடியும். பிறரிடம் பணம் வசூல் செய்து செய்யும் பொழுது அவர்களின் ஆலோசனையும் முக்கியம் என்பதால் பல ஐடியாக்கள் கேட்டு மண்டை குழம்பி போனது. இறுதி மூன்று நாட்களில் நான் போனில் பேசியது மட்டும் பல மணி நேரங்கள். இந்தக் கடை பிட்ஸா வேண்டாம், அந்தக் கடை பிட்ஸா வேண்டாம் என்று ஆரம்பித்த மோதல் எப்பொழுது நடனம் ஆரம்பிப்பது என்பது வரை தொடர்ந்தது. ஆனால் இறுதியில் அனைவருக்கும் பிடித்திருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 

அந்த விழா முடிந்தவுடன் நான் சம்முவின் பிறந்தநாள் விழாவில் பிஸியாகி விட்டேன். வரும் 12ம் தேதி சம்முவிற்கு இரண்டவது பிறந்த நாள். உங்கள் வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தையும் வேண்டுகிறோம்.!!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost