Wednesday, March 26, 2014

தமிழில் தான் பேசுகிறோமா?

தீஷு தமிழ் படித்துக் கொண்டிருந்தாள். சோளம் என்றால் என்ன என்றாள். சோளக்கருது என்றேன். அப்படினா என்றாள். அப்பொழுது தான் புரிந்தது நாங்கள் சோளத்தை கார்ன் என்று சொல்லுகிறோம் என்று. சிறு வயதில் சோளக்கருது என்று சொன்னது கார்ன் என்று எவ்வாறு மாறியது என்று யோசிக்கத் தொடங்கினேன். பதில் கிடைக்கவில்லை.

அப்படி எத்தனை வார்த்தைகளை மாற்றி இருக்கிறோம் அல்லது மறந்து இருக்கிறோம் என்று நாங்கள் பேசும் பொழுது கவனிக்கத் தொடங்கினேன். 

என் கவனிப்பைச் சொல்லுவதற்கு முன் அதற்கு முதல் நாள் நடந்த ஒரு சின்ன உரையாடல். எங்கள் தோழியர் வட்டத்தில் தெலுங்கு பெண் ஒருவர் இருக்கிறார். அவரிடம் சக்கரைக்கு தெலுங்கில் என்ன என்று ஒரு தோழி கேட்டதற்கு பஞ்சதாரா என்று சொல்லுவிட்டு, இப்பொழுது யாரும் பஞ்சதாரா என்று சொல்லுவது கிடையாது.யார் அவ்வளவு பெரிய வார்த்தையை உபயோகப்படுத்துவார்கள் என்றார். நான் உடனே நகைச்சுவைக்காக நயன்தாராவை எப்படி சொல்லுவீர்கள் என்றவுடன், நயன்தாரா தான் என்றார்கள். அது மட்டும் பெரிய வார்த்தை இல்லையா என்று சிரித்தோம். மற்றொரு தோழி இப்படி அடுத்த தலைமுறைக்குக் கடத்தாத‌ வார்த்தைகள் கொஞ்ச கொஞ்சமாக அழிந்து போகும் என்றார்கள். 

இப்பொழுது என் கவனிப்புக்கு வருவோம். நாங்கள் பேசுவதும், அடைப்புக்குறிக்குள் இருப்பது நான் சிறுவயதில் பேசியதும்.

1. ப்ரஷ் பண்ணு (பல் தேய்)
2. ஸிஸர் (கத்திரிக்கோல்)
3. ஸிலிப்பர்(செருப்பு)
4. ஸ்டவ் (அடுப்பு)
5. வெயிட் (காத்திரு)
6. டேஸ்ட் (ருசி)
7. ஸ்வீட் (இனிப்பா)
8. டைம் ஆகிடுச்சி (நேரம் ஆகிடுச்சி)
9. பனானா (வாழைப்பழம்)
10. டேட்ஸ்(பேரீச்சம் பழம்)
11. காஷூ (முந்திரி பருப்பு)

இது காலையில் பள்ளிக்குக் கிளம்பும் முன் ஒரு சில நிமிடங்கள் நடந்த உரையாடல்களில் நான் கவனித்தது. தோழி கூறியது போல் எத்தனை வார்த்தைகளைக்  கடத்தத் தவறி இருக்கிறேன். 

வீட்டில் தமிழில் தான் பேசுவோம் என்று பெருமையாக நான் சொல்லுவது உண்டு. ஆனால் பேசுவது தமிழ் தானா என்கிற சந்தேகம் வரத் தொடங்கி உள்ளது. 


21 comments:

  1. நீங்களாவது பரவாயில்லை சகோ, வெளிநாட்டில் இருக்கிறீர்கள். இங்கு தமிழ்நாட்டிலும் இப்படியே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி ஸ்கூல் பையன்! எல்லா இடங்களிலும் இதே நிலை தான். நான் மாற வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

      Delete
  2. சிலவற்றிக்கு பொருள் விளக்கம் சொல்லி குழந்தைகளுக்கு புரிய வைக்க எனக்கு 3/4 மணி நேரம் ஆனதுண்டு... அப்படி புரிய வைத்ததை வேறு மொழியில் சொன்னால் (எளிதாக), முதல் கேள்வி வரும் குழந்தையிடமிருந்து...!!!

    நாம் தான் முதலில் மாற வேண்டும் என்பது 100% முக்கியம்... உண்மையும் கூட...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்! நாம் தான் முதலில் மாற வேண்டும்.

      Delete
  3. வெளிநாட்டில் உள்ள தாங்களாவது பரவாயில்லை என்று தான் சொல்லலாம். ஏனெனில் அண்மையில் நான் ஒரு தமிழ் வீட்டுக்கு போயிருந்தேன். முதல் தலைமுறை படிப்பாளிகள், பிள்ளைகள் முழுவதும் ஆங்கிலத்திலேயே பேசின, இந்திய ஆங்கிலம் தான் என்றாலும், பெற்றோரும் பிள்ளைகளும் திணிக்கப்பட்ட நிலையில் ஆங்கிலம் பேசுவதை பார்த்து எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கடைசி வரை நான் தமிழில் தான் பேசினேன், அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் வலிந்து தமிழில் சொன்னேன். இறுதியாக விருந்தை முடித்துவிட்டு கிளம்பும் போது அந்த வீட்டுத் தலைவர் சொன்னார், பரவாயில்லை இக்பால், இத்தனை வருஷம் வெளிநாட்டில் இருந்தும் தமிழை மறக்கவில்லையே என்றார். அடப்பாவிகளா ! இந்த கட்டை கட்டையில் போறவரைக்கும் தமிழ் மறக்காது என்றுக் கூற நினைத்து, எதுவுமே சொல்லாமல் கிளம்பி விட்டேன்.

    ஒரு வகையில் கலப்படைந்த ஆங்கிலத்தையும் தமிழையும் பேசுவதை விட பேசாமல் அவர்களைப் போல முழுமையாக ஆங்கிலத்துக்கு மாறிக் கொள்ளலாம், தமிழாவது பாவம் பிழைத்துக் கொள்ளட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் இக்பால் செல்வன்! அரைகுறை தமிழுக்கு ஆங்கிலத்தில் உரையாடிவிடலாம் தான். ஆனால் தமிழில் தான் பேசுகிறோம் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். எவ்வளவு தவறு! குழந்தைக்கு புத்த்கத்தில் ஒரு நாய் படத்தைக் காட்டி நான் சொல்வது டாக்(dog) என்று தான். ஏன் நாய் என்று சொல்லவில்லை. ஆங்கிலத்தில் தெரியும் என்பதற்காகவா அல்லது நாளை பள்ளியில் குழந்தை குழம்பக்கூடாது என்பதற்காகவா அல்லது வேறு ஏதுமா என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
  4. உண்மைதான் தியானா..நிறைய வார்த்தைகள் இப்படி ஆயிற்று..
    சில வார்த்தைகளை மற்ற முடியும், சிலதை முடியாது... கடிகாரம் என்று சொல்வோமா?? சொன்னால் ஏற இறங்க பார்க்கிறாங்க

    ReplyDelete
    Replies
    1. ஆம் கிரேஸ்! முழுவதுமாக‌ மாற்ற முடியாது. முடியும் என்பதையாவது மாற்றலாம் என்று நினைத்திருக்கிறேன்..

      Delete
  5. சொல்வழக்கு ஆகி விட்டது நிறைய வார்த்தைகள்.
    ஷாப் கடை என்றும், நாளிதழ் என்று சொல்லாமல் காலையில் பேப்பர் வந்து விட்டதா என்று தான் கேட்கிறோம்.
    நீங்கள் சொல்வது போல் பேசும் போது கவனிக்க தொடங்கினால் நிறைய மாற்றங்கள் கொண்டு வரலாம்.
    ஆங்கில கலப்பு இல்லாமல் பேச பழக்குவது நல்லது தான்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் அம்மா. நீங்கள் சொல்வது சரி தான்! சொல்வழக்கு ஆகிவிட்டது. அதனால் தமிழிலில் தானே பேசுகிறோம் என்று மெத்தனமாக இருந்து விட்டேன். கவனித்துப் பார்க்கும் பொழுது தான் கலப்பு புரிந்தது. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்

      Delete
  6. பல வீடுகளில் இப்படி வேற்று மொழி கலந்து பேசுவது வாடிக்கையாகி விட்டது. இங்கே பலர் வீடுகளில் ஹிந்தியில் மட்டுமே பேசுகிறார்கள். தமிழ் என்று பேசினாலும், அதில் பல வார்த்தைகள் ஹிந்தி! :(((

    ReplyDelete
    Replies
    1. உண்மை வெங்கட்! நாம் வசிக்கும் இடங்களைப் பொருத்து கலப்பு மாறுகிறது. முழுவதுமாக கலக்காமல் பேச முடியவில்லை. முடிந்தவரை மாற்றலாம் என்று நினைத்திருக்கிறேன்.

      Delete
  7. இதெல்லாம் நம்ம செய்ற தவறுகள்தான். நாம் செய்வதால் அது தவறு இல்லை என நியாயப்படுத்துதல் எனக்குப் பிடிக்காது. சரி, இதையெல்லாம் சைக் கட்ட ஒரு வலைதளம் ஆரம்பிச்சு அதிலாவது கொஞ்சம் தழிலில் எழுதுவோமேனு வந்தால் கதை கிதை எழுதினால் பாதிக்கு மேலே ஆங்கிலம்தான் வருது (எதார்த்தமாக எழுதும்போது). :(

    ReplyDelete
    Replies
    1. நாம் செய்வதினால் தவறில்லை என்று நியாயப்படுத்தல் எனக்கும் பிடிக்காது. பதிவில் என் செயலை எங்கும் நியாயப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்! :‍)

      ஆம் வருண்! நாம் ஆங்கிலம் கலந்து பேசும் பொழுது, எதார்த்தமாக் எழுதுகிறோம் என்றால் ஆங்கிலம் கலந்து தானே எழுத முடியும்.தங்கள் கருத்துரைக்கு நன்றிகள்!

      Delete
  8. தியானா: நாம் என்று சொன்னது முக்கியமாக என்னைத்தான். உங்களை இல்லை! :) இதே தவறுகளை நானும் செய்கிறேன். நீங்க சொல்லீட்டீங்க. நான் சொல்லவில்லை அவ்ளோதான். :)

    இல்லைங்க, நான் கதைனு ஏதாவது எழுதும்போது அமெரிக்காவில் நடப்பதுபோல் எழுதும்போது பாதிக்கு மேலே ஆங்கிலத்தில்தான் எழுதுறேன்.. என்னை நானே திட்டி விமர்சிக்கொண்டேன் அவ்ளோதான். :)

    ReplyDelete
  9. உண்மைதான். நமது அன்றாட வழக்குகளில் நிறைய வேற்று மொழிச் சொற்கள் கலந்துவிடுகின்றன. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களுடன் பேசும்போது இத்தனை வேற்றுமொழி சொற்கள் வராது என்று தோன்றுகிறது.
    என் குழந்தைகள் இருவரும் இங்கு வந்து கன்னட மொழி படித்தாலும், அவர்களது தமிழ் மிக நன்றாக இருக்கிறது. அதற்குக் காரணம் இரண்டு பக்கப் பாட்டிகளும் என்று நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. தமிழை தமிழ்நாடு தொல்லை காட்சி ,மற்றும் நீங்களும் தானே அழித்துக்கொண்டு ..................(உண்மை தமிழனை சொல்லவில்லை )

    ReplyDelete
  11. தேவையான தன்மதிப்பீடு..
    சிந்திப்போம் இயன்றவரை இனிய தமிழில் பேசுவோம்..

    ReplyDelete
  12. ம்ம்...யோசிக்க வேண்டிய விஷயம்தான் தியானா!

    /வீட்டில் தமிழில் தான் பேசுவோம் என்று பெருமையாக நான் சொல்லுவது உண்டு. ஆனால் பேசுவது தமிழ் தானா என்கிற சந்தேகம் வரத் தொடங்கி உள்ளது. // உண்மைதான்!1 :‍(

    ReplyDelete
  13. -----------
    இப்பொழுது யாரும் பஞ்சதாரா என்று சொல்லுவது கிடையாது.யார் அவ்வளவு பெரிய வார்த்தையை உபயோகப்படுத்துவார்கள் என்றார். நான் உடனே நகைச்சுவைக்காக நயன்தாராவை எப்படி சொல்லுவீர்கள் என்றவுடன்,
    -------

    :-)

    உண்மைதான். கொஞ்சமாவது நம்மால் முடிந்த அளவு நல்ல தமிழில் எழுதறோம் என்று ஆறுதல் பட்டுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost